×

ரூ.25 கோடியில் கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: ஆலோசகரை தேர்வு செய்ய ஒப்பந்தம்

 

சென்னை, ஆக.28: சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்பதற்கான ஆலோசகரை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தற்போது 786 பூங்காக்கள், 104 சாலை மைய தடுப்புகள், 113 போக்குவரத்து தீவுத்திட்டுகள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் உள்ளன. இந்த 786 பூங்காக்களில் ஒப்பந்த முறையில் 584 பூங்காக்களும், மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக 145 பூங்காக்களும், பொதுமக்கள் தத்தெடுப்பு முறையில் 57 பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் பசுமையாக காட்சியளிக்கும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடுதல், புல்வெளிகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பூங்காவிலும் 50 முதல் 100 எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் நாட்டு மரக்கன்றுகள் நடுதல், அனைத்து மரங்களிலும், சுவர்களிலும் பச்சை, மஞ்சள் நிறங்களில் வர்ணம் பூசுதல், பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் குறைபாடுகள் சரிசெய்தல் மற்றும் உயர்தரத்தில் நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2009ம் ஆண்டு தேனாம்பேட்டையில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. அப்பகுதியில் தோட்டக்கலைத்துறை சொந்தமான 23 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 17 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, இந்த பூங்கா கட்டப்பட்டது.

இந்த நிலையில், மீதமுள்ள 6 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலமும் கடந்த ஜூன் மாதம் மீட்கப்பட்டது. அதாவது, கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்கா அருகே 6.09 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. அந்த பகுதியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் கூறினார். இந்த நிலையில், கதீட்ரல் சாலையில் ரூ.25 கோடியில் புதிய பூங்கா அமைப்பதற்காக பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த பூங்காவுக்கான ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 18ம் தேதி இந்த ஒப்பந்தத்திற்கான கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர்கள் பணிகள் நிறைவடைந்ததும் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ரூ.25 கோடியில் கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: ஆலோசகரை தேர்வு செய்ய ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Park ,Cathedral Road ,Chennai ,Artist Centennial Park ,Cathedral Road, Chennai ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...